கோவூர் பஞ்சரத்ன சங்கீத உத்சவம் 2026
ஸ்ரீ தியாகராஜரின் கோவூர் பஞ்சரத்னக் கீர்த்தனைகள்
ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் இயற்றிய அரியதாயும், ஆழ்ந்த ஆன்மீகப் பொருள் நிறைந்ததுமான இசைப் பொக்கிஷங்களில், கோவூரில் ஸ்ரீ சௌந்தராம்பிகை சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் மீது இயற்றப்பட்ட ஐந்து கீர்த்தனைகள் தனித்த சிறப்பிடம் பெறுகின்றன. இவை “கோவூர் பஞ்சரத்னக் கீர்த்தனைகள்” மற்றும் "ப்ரார்த்தனை கீர்த்தனைகள்" என்றும் போற்றப்படுகின்றன.
தியாகராஜரின் சைவ பக்தியை முழுமையாக வெளிப்படுத்தும் அபூர்வமான இசைமலர்கள் இவை.
ஐந்து கீர்த்தனைகளும் அவற்றின் ராகங்களும்
• ஸம்போ மஹாதேவ — பந்துவராளி
• ஈவ சுத நீவம்டி — ஸஹானா
• நம்மிவச்சின — கல்யாணி
• கோரி சேவிம்ப ராரே —
கரஹரப்ரியா
• சுந்தரேஸ்வருனி — சங்கராபரணம்
இந்த ராகங்கள் அனைத்தும்,
மகத்துவம், கம்பீரம், வைராக்யம் மற்றும் ஆன்மீக ஆழம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் கர்நாடக இசையின் உன்னத ராகங்கள் ஆகும்.
இவை ஒன்றிணைந்து,
கோவூர் ஸ்ரீ சுந்தரேஸ்வரரின் கருணைமிகு, அமைதியான, ஆன்மீகத் திருவுருவை, சிவ பக்தியை இசையாய் பிரதிபலிக்கின்றன.
*வரலாற்று மற்றும் ஆன்மீகப் பின்னணி*
ஸ்ரீ தியாகராஜரின் இசைத் தொகுப்பில்,
முழுமையாக சிவபெருமானுக்கே அர்ப்பணிக்கப்பட்ட கீர்த்தனைகள் என்பதில் கோவூர் பஞ்சரத்னங்கள் தனிச்சிறப்புடையவை.
வரலாற்றுச் சான்றுகளின் படி,
1836 ஆம் ஆண்டு சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள தலங்களுக்கு தியாகராஜர் மேற்கொண்ட யாத்திரையின் போது, அதாவது கோவூர், திருவொற்றியூர், காஞ்சிபுரம், திருப்பதி போன்ற தலங்களை அவர் தரிசித்தார். அந்தச் சூழலில், கோவூரில் தங்கிய காலகட்டத்தில் இக்கீர்த்தனைகள் இயற்றப்பட்டது.
கோவூர் என்பது சென்னை போரூர், மாங்காடு போன்ற இடங்களில் சமீபமாக அமைந்துள்ள ஒரு புராதன தலம். அங்கே அருள்பாலிக்கும் ஸ்ரீ சௌந்தராம்பிகை சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் அருள்பாலிக்கும்
பழமையும் அமைதியும் நிறைந்த ஒரு சிவஸ்தலம்.
நவக்கிரகங்களில் புதன் (புதன் கிரகம்) வழிபட்ட தலமாகவும் இத்தலம் போற்றப்படுகிறது. இவ்வகையில், ஆன்மீகத்தோடும் ஜோதிடச் சிறப்போடும் கூடிய தலமாக கோவூர் விளங்குகிறது.
*கோவூர் பஞ்சரத்னத்தின் அவசியம்*
திருவையாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆராதனையில் பஞ்சரத்னக் கீர்த்தனைகள் இசைக்கப்படும் போதிலும்,
கோவூரில் இயற்றப்பட்ட இந்த பஞ்சரத்னங்கள் அவற்றின் பிறப்பிடமான கோவூரிலேயே மிகவும் குறைவாகவே இசைக்கப்பட்டு வந்துள்ளன.
ஆனால் இசை ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் இக்கீர்த்தனைகள் எந்த வகையிலும் குறைந்தவை அல்ல;
மாறாக, தியாகராஜரின் பக்தி, வைராக்யம், சிவானுபவம் ஆகியவற்றின் உச்ச வெளிப்பாடுகளாகவே திகழ்கின்றன.
கோவூர் பஞ்சரத்ன மஹோற்சவம் என்ற வடிவில் இக்கீர்த்தனைகள் மீண்டும் உயிர் பெறுச் செய்வதுதான் *ஸ்ரீ சிவ நாம சங்கீர்த்தன சபாவின்* முக்கியமான குறிக்கோள்.
இந்த ஐந்து கீர்த்தனைகளையும் கோவூர் திருத்தலத்தில் இசைப்பது, தியாகராஜரின் சைவ பக்தியின் ஒரு முக்கியமான பரிமாணத்தை வெளிப்படுத்துகிறது. பொதுவாக அவரது ராமபக்தி அடையாளத்தால் மறைக்கப்பட்டிருந்த இந்த அம்சம், கோவூர் பஞ்சரத்னக் கீர்த்தனைகளின் மூலம் தெளிவாகப் பிரகாசிக்கிறது.
இவை வெறும் கச்சேரி மேடைகளில் பாடப்பட வேண்டிய இசைப்பாடல்கள் அல்ல; ஸ்ரீ சுந்தரேஸ்வரரின் திருவடிகளில் நிகழும் நாத உபாசனையாக, திருத்தலத்தின் ஆன்மிக சூழலில் இசைக்கப்பட வேண்டிய தெய்வீக படைப்புகள்.
கோவூர் பஞ்சரத்ன மஹோத்சவம் என்ற வடிவில் இக்கீர்த்தனைகளுக்கு மீண்டும் உயிர் ஊட்டுவது, *ஸ்ரீ சிவ நாம சங்கீர்த்தன சபாவின்* முக்கியமான குறிக்கோளாகும். இசை, க்ஷேத்திரம், பக்தி ஆகிய மூன்றும் ஒன்றிணையும் இந்த முயற்சி, கர்நாடக இசை மரபில் ஒரு புதிய ஆன்மிக திசையைத் திறக்கவல்லது. இது கர்நாடக இசை உலகில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
இந்த முதல் *கோவூர் பஞ்சரத்ன சங்கீத விழா* நடைபெறுவது, அதுவும் எந்த இடத்தில் ஸ்ரீ தியாகய்யர் அவர்கள் இயற்றினாரோ, அதே இடத்தில் நடப்பது இதுவே முதல் முறை.
அந்த வகையில் *ஸ்ரீ சிவ சஹஸ்ரநாம பாராயண மண்டலி மற்றும் சிவ நாம சங்கீர்த்தன சபா பக்தர்கள்* பெருமையுடன் மகிழ்ச்சியுடன், இதை கர்நாடக இசை உலகிற்கு சமர்ப்பித்து எல்லாம் வல்ல சௌந்த்ராம்பிகையும் சுந்தரேஸ்வரரையும், மஹான் ஸ்ரீ தியாகய்யரையும் போற்றி வணங்குகின்றோம்.
எல்லாம் ஈசன் அம்பாள் அருள் அனுக்ரஹம்.
என்றும் சிவகைங்கர்யத்தில்..
சிவ சிவ 🙏
Comments
Post a Comment